தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டி ஆர்.கே கார்டன் பகுதியைச் சார்ந்தவர் ராஜன். இவர் ஆனைமலையான் பட்டி பகுதியில் அலோபதி மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
ராஜனின் மகன் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் சூழலில் கடந்த 29ஆம் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு மனைவியுடன் ராஜன் சென்றுள்ளார். வீட்டை பூட்டிவிட்டு சென்று இருந்த ராஜன் தீபாவளியை முடித்துவிட்டு இன்று காலை தனது சொந்த ஊரான ஆனைமலையான்பட்டிக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. அதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜன் வீட்டின் கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த மேலும் அதிர்ச்சியில் மூழ்கினார். வீட்டிலிருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவை காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் வீட்டில் இருந்த சாவியை எடுத்து இயக்கி சென்றுள்ளதாக கூறபடுகிறது.