தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லப்பா(27), என்பவரது மனைவி சக்தி என்பவருக்கும், முத்தையாபுரம் அய்யன் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(30) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதனை பலமுறை செல்லப்பா கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி செல்லப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் சக்தியை, வினோத் வந்து சந்தித்ததாகவும், அப்போது அங்கு வந்த செல்லப்பா வினோத்தை கண்டித்து அனுப்பியதுடன் தனது வீட்டை உடனடியாக காலி செய்துவிட்டு குடும்பத்துடன் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செல்லப்பா நேற்று (செப்.06) வினோத்தை தேடி முத்தையாபுரம் அய்யன் கோயில் தெரு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதாகவும், ஆனால் வீட்டில் அவர் இல்லாத நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி பிரவீன்குமார் (25) என்பவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, அங்கிருந்து செல்லப்பா தப்பி ஓடியதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், அரிவாளால் வெட்டப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே துடி, துடிக்க உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.