குன்னூரில் பழக்கண்காட்சி மற்றும் ஏற்காட்டில் மலர் கண்காட்சி ஏற்பாட்டு பணிகள் தீவிரம் (Credits - ETV Bharat Tamil Nadu) நீலகிரி/ சேலம்: சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சியை முன்னிட்டு, பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான மேடைகள் அமைக்கப்பட்டும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்ஸ் பூங்காவில் வரும் மே 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் பழக்கண்காட்சியும் நடைபெற உள்ளது.
பல்வேறு விதமான பழங்களைக் கொண்டு கார்ட்டூன் வடிவங்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் பழக்கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களில் இருந்து அரிய வகை பழங்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்த தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் திட்டமிட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், பூங்காவில் அமரும் நாற்காலிகள் போன்றவையும் புது பொலிவுப்படுத்தப்பட உள்ளன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, தோட்டக்கலைத் துறை கூடுதல் இணை இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் பூங்கா மேலாளர் லட்சுமணன் உள்ளிடடோர் செய்து வருகின்றனர்.
அதேபோல், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில், அண்ணா பூங்காவில் வண்ண மலர்களால் பல்வேறு வடிவங்களை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 47-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மலர் கண்காட்சி நடைபெறும் அண்ணா பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் 7 லட்சம் வண்ண மலர்களைக் கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பாறைகள், நண்டு, சிப்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளிடம் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில், கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்ட் டக், மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுவது போலவும் வடிவமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க:“கண்ணா நீ தூங்கடா.. என் கண்ணா நீ தூங்கடா..” குட்டியுடன் ஹாயாக ஓய்வெடுக்கும் யானைக் குடும்பம்! - Elephants Sleeping Video