தென்காசி: தென்காசியின் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும்போது கையாடல் செய்த தலைமை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது தன்னார்வ அமைப்புகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணிகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் நான்கு பேர் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான அந்த நான்கு பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (42) என்பது தெரிய வந்தது.