திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (70). இவர் விவசாயம் செய்து வருகிறார். பழனிசாமியின் மகள் அம்பிகா. இவருடைய கணவர் ராஜ்குமார். ராஜ்குமார் படியூர் அருகே ஹாலோபிளாக் கம்பெனி நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களாக பழனிசாமிக்கும், ராஜ்குமாருக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இரு குடும்பங்களும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், இன்று (செப்.9) காலை ராஜ்குமார் பழனிசாமி வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பழனிசாமியை ஐந்து முறை சுற்றுள்ளார்.
ராஜ்குமார் சுட்டதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், ராஜ்குமார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, படியூர் பகுதியில் தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் குறித்து தகவறிந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களாக மாமனார் வீட்டுக்கு போக்குவரத்து இல்லாத நிலையில், மருமகன் வீட்டிற்கும் பழனிசாமிக்கும் குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ராஜ்குமாரின் மனைவி அம்பிகா தந்தை பழனிசாமி வீட்டுக்கு சென்று வந்ததாகவும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் ராஜ்குமார் மாமனாரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் பலி.. தேனியில் சோகம்!