தேனி: தமிழ்நாடு - கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக, கூடலூர், லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அந்த வகையில், தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முதல் போக பாசன வசதிக்காக கடந்த ஜூன் 1ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று (ஜூலை 29) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துக் காணப்படுகிறது.