சென்னை:சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்கள் கல்வி கூட்டியகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் மக்கள் கல்வி கூட்டியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பேசுபாேது, "சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், சென்னை மாநிலக் கல்லூரியின் பேராசிரியராகவும், சிலக் கல்லூரிகளின் முதல்வராகவும் நான் பணியாற்றியுள்ளேன்.
நாங்கள் படிக்கும் காலத்தில் கல்லூரிகளில் தமிழ் மன்றம், மாணவர் மன்றம், மாணவர் மன்றத் தலைவருக்கான அறை போன்றவை இருந்தது. நாங்கள் கல்லூரிகளில் அரசியல் குறித்தும் பேசினோம். அப்போதேல்லாம் ரூட்டு தல என்ற பிரச்சனை இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்பொழுது பேராசிரியர்களுக்கு மதிப்பளிப்பதை காட்டிலும் ரூட்டு தலயை பார்த்து மாணவர்கள் மதிப்பளிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். கல்லூரிகளில் உள்ள பிரச்சனைகளை கொண்டு செல்வதற்கும், மாணவர்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை தெரிந்துக் கொண்டு, நல்லத் தலைவர்களை தேர்வு செய்யவும் மாணவர் மன்றம் போன்றவை தேவைப்படுகிறது.
குறிப்பாக கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து அனைத்துகட்சிகளின் மாணவர் அணியை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.