சென்னை:சென்னையை சேர்ந்த சுவபாய், சம்பாலால் ஆகியோர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல செய்திருந்தனர். அதில், 'கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக
சேத்துபட்டில் உள்ள மேத்தா தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம். சிகிச்சைக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாயை செலுத்த வேண்டும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, ஹைதராபத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் TAGIC AIG காப்பீட்டு நிறுவனத்தில் நாங்கள் செலுத்திய மருத்துவ காப்பீட்டு தொகையில் இருந்து பில்களை செலுத்த விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் விதிகளின்படி ஒரிஜினல் பில்களை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே பரிசீலனை செய்ய முடியும் என எங்களது கோரிக்கையை நிராகரித்தது. மேலும், காப்பீடு 2021ல் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவித்தது.
கடந்த 2019 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமீயத்தை தவறாமல் செலுத்தி வந்தோம். 2022 வரை அது செல்லுபடியாகும் நிலையில் நிறுவனம் பாலிசி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்தது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.
காப்பீட்டு நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்ததால் 1 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாயை கடனாக வாங்கி மருத்துவமனையில் செலுத்தப்பட்டது. அதனால், எங்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 50 ஆயிரம் இழப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, 'காப்பீடு நிறுவனத்தின் தரப்பில், ஒரிஜினல் பில்கள் இணைக்கப்படவில்லை. அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி அமர்வு, 'மருத்துவ காப்பீடு தொகையை பெற ஒரிஜினல் பில்களை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் காப்பீட்டு நிறுவனம் கேட்கக்கூடாது. மேலும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாய்க்கான மருத்துவ செலவை 9 சதவிகித வட்டியுடன் 2022ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு நிறுவனம் வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாகவும் இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.