தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிண்டி சம்பவம்; விக்னேஷுக்கு ஜாமீன் கொடுத்தது ஏன்..? ஐகோர்ட் நீதிபதி கொடுத்த விளக்கம்..! - CHENNAI DOCTOR STABBED CASE

தவறு செய்யும் மருத்துவர்கள் மீது புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்க முடியும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மருத்துவர் பாலாஜி, சென்னை ஐகோர்ட், கைதான விக்னேஷ்
மருத்துவர் பாலாஜி, சென்னை ஐகோர்ட், கைதான விக்னேஷ் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2024, 8:58 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, அவரது அறையில் விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விக்னேஷ் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறைக்கு கேள்வி எழுப்பி, தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் அரசு தோல்வி அடைந்து விட்டது - சென்னை ஐகோர்ட் சரமாரி கருத்து!

இந்நிலையில், நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத காரணத்தால், விக்னேஷ்க்கு ஜாமீன் வழங்கப்பட்டது போன்ற தோற்றம் உருவாகி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக எந்த புகாரும் நிலுவையில் இல்லை என்று விளக்கமளித்தார்.

மருத்துவர்களின் உரிமையையும், பாதுகாப்பையும் தமிழக அரசு எப்போதும் உறுதி செய்யும் என்றும், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவர்கள் மீதான புகார் அளித்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், ஜேக்கப் மேத்யூ வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, மனுதாரர் நீண்ட நாட்கள் சிறையில் இருந்த காரணத்தினாலும், பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதன் அடிப்படையில் தான் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details