மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் தங்கும் விடுதியுடன் பிரபல தனியார் சைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே மூவலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சுந்தர் (45) என்பவர், தனது குடும்பத்தினருடன் வைத்திஸ்வரன் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பி வரும் வழியில், இந்த சைவ உணவகத்தில் உணவு அருந்தச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து, அவரது மனைவி தேவி, 12 வயது மகள் சிவபிரியை மற்றும் உறவினர்கள் தோசை, இட்லி, பன்னீர் பரோட்டா என தனித்தனியே ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், அப்போது சுந்தரின் 12 வயது மகள் சாப்பிட்ட பன்னீர் பரோட்டாவில் முழு கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கேயே வாந்தி எடுத்து, தனக்கு வயிறு வலிப்பதாகவும் கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை சுந்தர், உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.