தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விஜய் அரசியலுக்கு வருவதை பார்த்து சீமான்பயப்படுகிறார்" - நாதக முன்னாள் நிர்வாகிகள் பகீர்!

சீமானுக்கு தன்னம்பிக்கை கிடையாது என்றும் யாருக்கு தன்னை விட கைதட்டல்கள் அதிகமாக வந்தாலும் அவர்களை அடக்கி விடுவார் எனவும் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நாதக முன்னாள் நிர்வாகிகள் பேட்டி , சீமான்(கோப்புப்படம்)
நாதக முன்னாள் நிர்வாகிகள் பேட்டி , சீமான்(கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 4:06 PM IST

சென்னை:நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மாநில பொறுப்பாளர்கள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன், புகழேந்தி மாறன், தனசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இழப்புகளை சந்தித்துள்ளோம்: இதில் வெற்றி குமரன் பேசியதாவது; "விடுதலை போரில் தமிழ் இனம் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலில் நன்றாகத்தான் இருந்தார். ஆனால், தற்போது சில காலங்களாக எதேச்சதிகாரத்தை கையில் எடுத்துள்ளார். இருந்தாலும் நாங்கள் பொறுமையோடு பின்பற்றி வந்தோம். பொருளாதாரம் ரீதியாகவும், குடும்பத்தின் அடிப்படையிலும் அவ்வளவு இழப்புகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.

இப்போது நாங்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோம் அல்லது வெளியேறினோம். ஆனால், எங்கள் தமிழர் அரசியலை நிறுத்த போவது இல்லை. இந்த அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நமக்கு நாமே அரசியல் கட்சியை ஏன் உருவாக்க கூடாது.

இதையும் படிங்க:தீபாவளிக்கு தனியார் பேருந்துகள் வாடகை; அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது - அன்புமணி, டிடிவி கண்டனம்!

சீமானால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்கள், நிர்வாகிகள், தமிழை உயிராக நேசிக்க கூடிய அனைவரும் ''தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒன்றுகூடியுள்ளோம். வரும் நவம்பர் 27 ஆம் தேதி திருச்சியில் தமிழீழ விடுதலை போரில் உயிரிழந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இருக்கின்றோம்.

தமிழகம் முழுவதும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் கலந்தாய்வு செய்த பின்னர் நாங்கள் அரசியல் பயணத்தை மேற்கொள்வோம். இந்த கூட்டத்திற்கு தமிழர் என்று எண்ணுகிற அனைவரும் வரலாம்.

'கொள்கையில் மாற்றம்': நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை சீமான் முறையாக நடைமுறைப்படுத்தவோ மேற்கொள்ளவோ இல்லை. 2010 ல் தேர்தல் அரசியலில் ஆரம்பித்த கட்சி 15 வருடத்தில் 20 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 8 சதவீதத்தை பெற்றுள்ளது. தலைமை சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. தான் சொல்லும் அனைத்தையும் ஆம் என்று நம்ப கூடியவர்களைத்தான் சீமான் தன்னுடன் வைத்துள்ளார். கட்சியின் கொள்கையில் இருந்து மாற்றாக செயல்படுவது, புதிய தலைமுறை இளைஞர்கள் நம்பிக்கையை வீணடிப்பது போன்று வந்துவிட்டது.

நாம் தமிழர் கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் இருக்கிறோம். நாம் தமிழர் கட்சியில் நாங்கள் சேரவில்லை, நாங்கள் தான் உருவாக்கினோம். ஒரு தலைவர் என்றால் நல்லது, கெட்டது என்ன என்பதை முறையாக ஆராய வேண்டும். சீமானுக்கு தன்னம்பிக்கை கிடையாது. யாருக்கு தன்னை விட கைதட்டல்கள் அதிகமாக வந்தாலும் அவர்களை அடக்கி விடுவார். விஜய் அரசியலுக்கு வருவதை பார்த்து சீமான் பயங்கரமாக பயப்படுகிறார்" என இவ்வாறு வெற்றி குமரன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details