கிருஷ்ணகிரி:கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியாக விநாடிக்கு 4,160 கன அடி நீர் திறந்து விடப்படப்பட்டுள்ளது.
இந்த நீரானது, கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்தி மலையில் உருவாகி, கர்நாடகா வழியாக தமிழகத்தில் உள்ள பாகலூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையை வந்தடைகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றின் நீர்வளத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்கின்றனர்.
தரைப்பாலத்தை மூழ்கடித்த ரசாயன நுரை (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், நச்சுத்தன்மை உடைய ரசாயனக் கழிவுகள் நீரில் கலக்கப்பட்டு, ஆற்றில் குவியல் குவியலாக நுரை பொங்கி துர்நாற்றத்துடன் நீரானது வெளியேறுகின்றது. அதிலும் குறிப்பாக, ஒசூர் - நந்திமங்கலம் சாலையில் அமைந்துள்ள தட்டனப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலத்தையொட்டி நீர் செல்கிறது.
இதையும் படிங்க:நிரம்பி வழிந்த பொன்னை தடுப்பணை! பூக்களை தூவி நதியை வரவேற்ற கிராம மக்கள்!
இதன் காரணமாக, தரைப்பாலத்தின் மீது சுமார் 15 அடி உயரத்திற்கும் மேலாக அதிகப்படியான ரசாயன நுரைகள் பொங்கி, ராட்சத நுரைகளாக தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இந்த ராட்சத நுரையினால் தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராம மக்கள் சென்று வரும் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுமார் 15 கிமீ தூரம் சுற்றி ஒசூருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒசூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தரைப்பாலத்தில் குவியல் குவியலாக இருந்த ரசாயன நுரைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நுரைகள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இதற்கிடையே, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் இருந்து அதிகப்படியான நீர் ஆர்ப்பரித்து செல்வதால் அணையை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களில் உள்ள ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்