திருச்சி:திருச்சி சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரத்யேக திடல் அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.15) காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 775 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
முதலாவதாக ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.