சென்னை:கடந்த 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னை மாநகராட்சியின் 49வது வார்டில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டுப்போடுவதாகப் புகார் எழுந்தது. அப்போதைய நிலையில், திமுக பிரமுகர் நரேஷ் குமார் என்பவரைப் பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடன் இருந்து அதிமுகவினர், திமுக பிரமுகர் நரேஷ் குமார் மீது கள்ள ஓட்டுப் போடுவதாகக் குற்றம்சாட்டினார்.
இதுமட்டும் அல்லாது, திமுக பிரமுகர் நரேஷ் குமாரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீசாரிடமும் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, திமுக பிரமுகர் நரேஷ் குமாரைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும் மற்றும் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரைக் கடந்த ஜூலை மாதம், மாநில மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்தது. ஆனால், தான் அளித்த புகாரில் தனது விளக்கத்தைக் கேட்காமல் வழக்கை முடித்து வைத்ததாகக் கூறி, ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஆணைய உறுப்பினராக (உறுப்பினர் கண்ணதாசன்) உள்ள திமுக ஆதரவு நபரால் தனது புகார் நேர்மையாக நடுநிலையுடன் விசாரிக்கப்படவில்லை எனவும், புகாரை முடித்து வைத்த ஆணைய உத்தரவை ரத்து செய்து, புகார் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் காவல்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:தேசியவாத காங்கிரஸ் கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!