தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிவர்ஸ் எடுத்தபோது கடலுக்குள் விழுந்த கார்.. ஓட்டுநரை காணவில்லை! - தேடும் பணி தீவிரம்! - CAR ISSUE

சென்னை துறைமுகத்தில், காரை ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலுக்குள் விழுந்த நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார் மீட்கப்பட்டது. காரிலிருந்த ஓட்டுநரை காணவில்லை என்பதால் அவரை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

கடலுக்குள் விழுந்த கார்
கடலுக்குள் விழுந்த கார் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2024, 3:25 PM IST

சென்னை:சென்னை, கொடுங்கையூர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முகமது ஷாகி (33) சென்னை துறைமுகத்தில் கடலோர காவல் படைக்கு வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவர் டவேரா காரில், கடலோர காவல்படையில் பணிபுரிபவரான ஜோகேந்திர காண்டா என்பவரை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே ஜவகர் டக்-5 என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் விழுந்தததாக கூறப்படுகிறது.

காரில் இருந்த கடலோர காவல் படை வீரர் ஜோகேந்திர காண்டா காரில் இருந்து குதித்து தப்பினார். ஆனால், கார் ஓட்டுநர் முகமது ஷாகி காரோடு கடலுக்குள் மூழ்கினார். இந்த தகவல் அறிந்து சென்னை துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், துறைமுக தீயணைப்புத் துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் காரையும், ஓட்டுநரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. காரில் இருந்து குதித்து தப்பிய கடலோர காவல் படைவீரர் ஜோகேந்திர காண்டாவை, பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :மது போதையில் தந்தை - மகன் தகராறு; ஒருவர் மரணம்! நடந்தது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரை ரிவர்ஸ் எடுத்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் கடலுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. கார் கடலுக்குள் மூழ்கும் போதே, காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து வெளியே வந்து கடலோர காவல் படை வீரர் மயங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

30க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும், 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ஸ்கூபா வீரர்களும், துறைமுகம் போலீசாரும் கார் ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் கடலில் விழுந்த கார் மீட்கப்பட்டது. ஆனால், காரில் ஓட்டுநர் இல்லாததால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுநர் காருடன் கடலில் விழுந்த தகவலறிந்து அவருடைய உறவினர்கள் சென்னை துறைமுகத்திற்கு விரைந்தனர். ஆனால், துறைமுகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதாலும், ஓட்டுநருக்கு என்ன நடந்தது என முறையான தகவலை காவல் துறை தெரிவிக்காததாலும் ஓட்டுநரின் உறவினர்கள் துறைமுக வாசலில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details