தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பிரமாண்ட தோல் கண்காட்சி; பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடக்கிறது! - CHENNAI LEATHER FAIR

சென்னையில் 38வது இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடக்கிறது.

சென்னையில் தோல் கண்காட்சி
சென்னையில் தோல் கண்காட்சி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 7:05 PM IST

சென்னை: 38வது இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடக்கிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியை இந்திய வர்த்தக மேம்பாட்டு கழகமும், தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகமும் இணைந்து நடத்துகின்றன.

12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (ஜன.31) தாஜ் கிளப் ஹவுஸில் நடைபெற்றது.

வேலைவாய்ப்புகள் உருவாகும்

கண்காட்சி குறித்து பேசிய இந்திய தோல் பொருட்கள் மற்றும் காலணித்துறை நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வம் பேசுகையில், '' தோல் உற்பத்தியில் இந்தியா தற்போது 23.69 பில்லியன் டாலராக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 47 மில்லியன் டாலர் உற்பத்தியை எட்டும். இதன் மூலம் இந்தியாவில் 25 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். தோல் ஏற்றுமதி கழகம் ஏற்றுமதிக்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 18 வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில் இந்நிறுவனம் பங்கேற்றுள்ளது. மேலும் 6 சர்வதேச கண்காட்சிகளில் இந்நிறுவனம் இந்த ஆண்டில் பங்கேற்க உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல 6 பெட்டிகள் தேவை...

அதன்பின் இந்திய தோல் பொருட்கள் மற்றும் காலணித்துறை தென் மண்டல தலைவர் அப்துல் வகாப் பேசுகையில், '' இந்த முதல் அரையாண்டில் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால், மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏற்றுமதியில் ஐந்து பில்லியன் டாலர்கள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதியை உறுதியாக எட்டும்'' என்று கூறினார்.

இந்திய தோல் பொருட்கள் மற்றும் காலணித்துறை நிர்வாக இயக்குநர் ஆர். செல்வம், "இதில் ஏறத்தாழ 20 நாடுகளுக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த வருடம் 12,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த வருடம் 15,000 பார்வையாளர்களை இந்த கண்காட்சி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வடிவமைப்பை உருவாக்குவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதன் நோக்கமாகவும் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏறத்தாழ 36 வடிவமைப்பாளர்கள் வெளிநாட்டில் இருந்து பங்கேற்க இருக்கின்றனர். உள்நாட்டு வடிவமைப்பாளர்கள் 10 பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர். இந்த கண்காட்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details