சென்னை:விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பட், சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தாரகை கத்பட்-க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் பேரியக்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. திமுக வேட்பாளர்களை விட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று அவர் எடுத்த நடவடிக்கைகளையும், முக்கியத்துவங்களையும் அனைவரும் அறிவோம்.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் அனைவருக்கும் நன்றி. இந்த தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியை தெரிவிக்கிறது. முதலமைச்சரின் மூன்று ஆண்டுகள் ஆட்சிக்கு இந்த தேர்தல் வெற்றி பதில் சொல்லி உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் எங்கும் இல்லாத வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், “இன்று விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவைத் தலைவர் முன்பு பதவி ஏற்றுக் கொண்டுள்ளேன். காங்கிரஸ் கமிட்டியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு சாட்சியாக விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உறுதுணையாக இருந்தனர்.