இறந்தவர் உடலை விளைநிலங்கள் வழியாக சுமந்து செல்லும் கிராம மக்கள் தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முறையான சாலை வசதி இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக, விளைநிலங்கள் வழியாக சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில் ”பாச்சூர் கிராமத்தில் மயானம் செல்வதற்கு உரிய சாலை வசதி இல்லை.
இதனால் இறுதிச்சடங்கு செய்வதற்காக இறந்தவர்கள் உடல்களை விளை நிலங்கள் வழியாக தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுக்களும் கொடுத்துள்ளோம்.
ஆனால், தற்போது வரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தற்போது மயானம் செல்லும் பாதை முழுவதும் கருவேலமரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றை சிரமத்துடன் கடந்து சென்றால் விளைநிலங்களில் உளுந்து, நிலக்கடலை, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்த வயல்களில் இறங்கிச் செல்லும் நிலை உருவாகி உள்ளது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்பவர்களுக்கும், நிலத்தின் உரிமையாளர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து, மயானத்துக்குச் செல்வதற்கு உரிய சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; கைது செய்த ஆசிரியர்களிடம் தரக்குறைவாகப் பேசியதாகக் காவலர் மீது குற்றச்சாட்டு!