தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வு முடியும் வரை மின் தடை செய்யக்கூடாது - அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு! - மின்சார மாதாந்திர பராமரிப்பு பணி

Thangam thennarasu: வரக்கூடிய கோடை காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை குறித்தும், அதனை எவ்வித சிரமமின்றி பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 4:52 PM IST

சென்னை:நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், எதிர்வரும் கோடை காலத்தின்போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து, அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைமை அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வரக்கூடிய கோடை காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை குறித்தும், அதனை எவ்வித சிரமமின்றி பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

ஆய்வின்போது தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத உச்சபட்ச மின் தேவை முறையே, 17 ஆயிரத்து 35 மெகா வாட் மற்றும் 17 ஆயிரத்து 690 மெகா வாட் எட்டிய நிலையில், இந்த உச்சபட்ச மின் தேவையானது, எவ்வித மின் தடையுமின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மின் தேவையுடன் இதனை ஒப்பிடும்போது முறையே இது சுமார் 11.1 சதவீதம் மற்றும் 9 சதவீதம் கூடுதலாகும். இதே போன்று, மார்ச் மற்றும் ஏப்ரல் மாத உச்சபட்ச மின் தேவை முறையே 18 ஆயிரம் மெகாவாட் மற்றும் 19 ஆயிரத்து 900 மெகாவாட் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் உற்பத்தி மூலம், 13 ஆயிரத்து 999 மெகாவாட் மற்றும் 15 ஆயிரத்து 93 மெகாவாட் பூர்த்தி செய்யப்படுகிறது.

மீதமுள்ள மின் தேவையை மார்ச் மாதம் 3 ஆயிரத்து 571 மெகாவாட் மற்றும் ஏப்ரல் 4,321 மெகாவாட் மின்சாரத்தினை வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் கோடை கால மின் தேவையை முழுமையாக எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும். மேலும், கோடை காலத்தில், மின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மின் பராமரிப்பு பணிகளுக்கான 2 லட்சத்து 32 ஆயிரத்து 896 மின் கம்பங்கள், 17 ஆயிரத்து 918 மின்மாற்றிகள் மற்றும் 12 ஆயிரத்து 500 கி.மீ மின் கம்பிகள் உள்ளிட்ட முக்கிய தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கும், அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, தமிழகத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த தேவையினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரை தமிழ்நாட்டில் பாஜக களமிறக்குமா? - கே.பி.முனுசாமி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details