தென்காசி: செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள பீடி சுற்றும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து தன் கனவை நோக்கி நகர்ந்து வந்த மாணவி இன்பா, தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, தன் பெற்றோருக்கு மட்டுமின்றி, மாவட்டத்திற்கே பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
நம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணம் உள்ள பல மாணவர்கள் தொடர்ந்து குடிமைப் பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி பெற முயன்று வருகின்றனர். மேலும், தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் செங்கோட்டை நகராட்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார் மாணவி இன்பா.
மாணவி இன்பாவிற்கு சிறுவயதில் இருந்தே யுபிஎஸ்சி தேர்வு குறித்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதனை மணதில் வைத்து, மாணவி இன்பா பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த மதிப்பெண்களுடன் கல்லூரிப் படிப்பையும் முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்விற்குத் தயாராக வேண்டும் என நினைத்தபோது, அவரது குடும்பம் பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்ததால், தேர்வைச் சந்திப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து குடும்பத்தினரின் உதவியுடன் படித்துக் கொண்டிருந்த மாணவி இன்பாவிற்கு, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. கூடுதலாக, தனது படிப்பிற்கு செங்கோட்டை நூலகம் பெரிதும் உதவியாக இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாணவி இன்பா கூறுகையில், “வீட்டில் படித்தால் முழுக் கவனம் செலுத்த முடியாது என்பதால், நூலகத்திலேயே படிப்பதற்கான முழு நேரத்தையும் செலவு செய்தேன்.
பொருளாதாரம் சார்ந்து பிரச்னைகள் சந்தித்து வந்தது மட்டுமல்லாமல், பெண் என்பதாலும் பல்வேறு கேள்விகளுக்கும் ஆளானேன். என உறவினர்கள் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டியது தானே என்றெல்லாம் எனது தாயிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவை அனைத்தையும் தாண்டி எனது தாய் மற்றும் சகோதரனின் ஒத்துழைப்புடன், தற்போது இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.