தென்காசி:தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பயணிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியராஜா தலைமை வகித்தார், செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டம் சார்ந்த பல்வேறு ரயில்வே கோரிக்கைகள் மற்றும் குறைகள் விவாதிக்கப்பட்டு, பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- செங்கோட்டையில் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை 7 மணிக்கு மேல் புறப்படும் வகையில் மாற்றம் செய்து பொதிகை எக்ஸ்பிரஸ்-இன் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
- செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் மும்முறை ரயில் மற்றும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயில் ஆகியவற்றில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சேவைகளின் நாட்களை அதிகரிக்க வேண்டும்.
- செங்கோட்டை - மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை - ஈரோடு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளையும் சேர்த்து கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.
- செங்கோட்டை - நெல்லை காலை ரயில், நெல்லை - செங்கோட்டை மாலை ரயில் ஆகியவற்றில் தனியாக மகளிர் பெட்டி ஒன்றையும் சேர்த்து கூடுதல் பெட்டிகள் இணைத்து ரயிலை இயக்குதல் வேண்டும்.
- தென்காசி வழியாக புதுடெல்லி மற்றும் மும்பை ரயில்களை இயக்குதல் வேண்டும்.
- மீட்டர்கேஜ் காலத்தில் இயங்கியதைப் போல தென்காசி வழியாக நெல்லை - கொல்லம் நேரடி பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும்.
- தென்காசி வழியாக கோவை மற்றும் பெங்களூருக்கு நிரந்தர ரயில்களை இயக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை தோறும் இயங்கும் சிறப்பு ரயில்களான நெல்லை - தாம்பரம் மற்றும் நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில்களை நிரந்தரமாக வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.