தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பூசாரி.. தேனியில் பரபரப்பு! - Theni Temple Priest arrested

தேனி அருகே கோயிலுக்குள் சிறுவர், சிறுமிகளை அழைத்துச் சென்ற பூசாரி, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போக்சோ கோப்புப்படம்
போக்சோ கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 10:28 AM IST

தேனி: தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பகவதி அம்மன் கோயிலில் 70 வயது நபர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பூசாரி, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனையடுத்து, பதட்டத்துடன் வெளியே வந்த சிறுமி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோயில் முன்பாக கூடினர். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் தாக்க வந்து விடுவார்கள் என நினைத்த பூசாரி, கோயிலை பூட்டிக் கொண்டு கோயிலுக்குள் ஒளிந்து கொண்டார்.

இதையும் படிங்க:மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..கோவை மருத்துவர் போக்சோவில் கைது;ஈஷா விளக்கம்!

இதனை அடுத்து வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் கோயிலை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து, கோயிலைத் திறந்து கோவிலுக்குள்ளேயே விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிறுவர் சிறுமியரின் உறவினர்கள் பெருமளவு திரண்டு பூசாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட முற்பட்டதால், காவல்துறையினர் கோயில் பூசாரியை வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details