சென்னை: தெலங்கானா மாநிலம், ராமகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (30). இவர் தொழிலதிபர். இந்த நிலையில், சந்தீப் குமார் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ராமகுண்டம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீராம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை அடுத்து போலீஸ் தேடுவதை அறிந்த சந்தீப் குமார், மலேசிய நாட்டிற்குச் சென்று அங்கு தலைமறைவாகிவிட்டார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் காவல் ஆணையர், சந்தீப் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார்.
அதோடு, சந்தீப் குமார் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள்பரிசோதித்தனர். அப்போது 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் சந்தீப் குமார் அந்த விமானத்தில் வந்திருந்தார்.