தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் தொடர்புடைய ஆசிரியர்கள் விருதிற்கு தகுதியற்றவர்கள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு - TEACHERS AWARDS

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் 'மாநில நல்லாசிரியர்' விருதிற்கு பரிந்துரைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வளாகம்(கோப்பு படம்)
பள்ளிக்கல்வித்துறை வளாகம்(கோப்பு படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 1:22 PM IST

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை, ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் 171 ஆசிரியர்கள், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 171 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் மெட்ரிக் பள்ளியில் பணிபுரியும் 38 ஆசிரியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் ஆகிய பிரிவுகளில் தலா இருவருக்கும் என 386 ஆசிரியர்களுக்கு இந்தாண்டு விருது வழங்கப்பட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:இந்தநிலையில் விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதில், செப்டம்பர் 5-ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு, மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.10,000 ரொக்கப் பரிசும், ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுவும் மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விருதிற்குத் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

இதனை முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான மதிப்பீடு செய்ய வேண்டும். மாவட்ட தேர்வுக்குழுவினர், மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.

தகுதி:

  • அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
  • மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிட, பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை, நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள்.
  • இவ்விருது வகுப்பறையில் கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
  • அலுவலகங்களில் பணியில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.
  • கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது.
  • பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும்.
  • பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை. தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.
  • அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக் கூடாது.
  • கல்வியினை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இவ்விருதிற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட வேண்டும்.
  • மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது என்றும், கடந்த ஐந்தாண்டுகளில் பொது தேர்வில் மாணவர்களை பங்கேற்க செய்து ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுத் தந்த விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெட்ரோலால் நடந்த அசம்பாவிதம்..கோவையில் 3 இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழப்பு.. 4 பேருக்கு பயங்கர தீக்காயம் !

ABOUT THE AUTHOR

...view details