சென்னை: அரசியல் களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராம்குமார், ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், தேர்தல் களங்கள் தீவிரமாகும் சூழலில் நடிகர் விஜயின் அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்று கேட்கப்பட்டதற்கு, "எந்த சூழலிலும் எங்கள் தலைவரின் கட்சி வெற்றி முகத்தில் மட்டுமே இருக்கும். எங்களது கட்சிப் பெயரிலே வெற்றி என்பதை அடையாளப்படுத்திதான் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவித்திருக்கிறோம். இதுவே எங்களின் வெற்றி.
பல முன்னணி தலைகள் அச்சப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், எங்கள் தலைவர் அரசியல் களம் புகுந்துள்ளது ஒரு ரசிகராக மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதையே எங்களின் முதல் வெற்றியாகக் கருதுகிறோம். தமிழக மக்களின் தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் கூடுதல் பொறுப்புகளோடு நாங்கள் பணியாற்ற உள்ளோம்" என்றார்.
மக்கள் சேவையே மகேஷன் சேவை: தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் களம் புகும் முன்பே சில உதவிகளை செய்து வந்தார். தற்போது இந்த சேவை தொடருமா அல்லது வேறு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு, "கட்டாய முறையில் இன்னும் அதிகளவில் மக்கள் பணிகள் தொடரும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைப் போல, மக்கள் சேவைக்காக மட்டுமே தமிழக வெற்றி கழகம் முழு மூச்சாக இயங்கும்.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் நாங்கள் போட்டியிடப் போவதும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதுமில்லை. எங்களின் ஒரே இலக்கு 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலே. தனித்துப் போட்டியிடுவது குறித்து எங்கள் தலைவர் வரும்காலங்களில் அறிவிப்பார். 2026 தேர்தலுக்காக நாங்கள் முற்றிலும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் அரசியல் களம் காண காரணம்?சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் திடீரென முழுநேர அரசியல் களம் காண்பதற்கான முக்கியக் காரணம், மக்கள் சேவை மட்டுமே. தனக்கென்று அந்தஸ்து, புகழ் அனைத்தையும் வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கான நன்றியைத் தெரிவிப்பதற்கே தமிழக வெற்றி கழகம்.
சுயநலமாக செயல்படும் பல நடிகர்கள் மத்தியில், பொதுநலத்துடன் தன்னை வளர்த்த தமிழ் மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் வறுமையைத் தீர்க்கவே அரசியல் களம் கண்டுள்ளார். தனிமனித உரிமைகளை காப்பதற்கே அரசு. அந்தப் பயணத்திற்கு அதிகாரம் அதிகளவில் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தை அரசியல் மூலம் பெற்று, ஆட்சி அமைத்து மக்களுக்கு சேவை செய்வார்.
50 ஆண்டு திராவிடக் கட்சிகளின் மத்தியில் பொதுமக்களின் ஆதரவை சம்பாதிப்பாரா விஜய்?மக்களின் ஆதரவு என்பது எங்கள் தலைவருக்கு கட்டாயமாக உண்டு. என்னதான் அரசியலும், சினிமாவும் தனிச்சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், இரண்டிலும் மக்களின் ஆதரவின்றி எதற்கும் சாத்தியமில்லை. மக்கள் ஆதரவு அதிகளவில் இருப்பதனால்தான் கட்சி துவங்கப்பட்டுள்ளது.