தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு; சைலன்ட்டாக தயாராகும் தேர்தல் ஆணையம்! - tn local body election

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 6:20 PM IST

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி (ணCredit - TN State Election Commission Official Site)

சென்னை:தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுவரையறை முடிந்தபின், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபின் மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இந்தாண்டு டிசம்பர் மாதம் முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் 2026ல் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதன்படி, வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், "ஊரக உள்ளாட்சிகளின் தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை, இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் அவற்றில் சிறிதளவு பழுதடைந்தவை, முழுமையாக பழுத்தடைந்தவற்றை தரம் பிரித்து வைக்க வேண்டும். சிறிய பழுதுகளை சரி செய்ய பெட்டி ஒன்றுக்கு ரூ.21 வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி அவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:செப்.23ல் தமிழக வெற்றிக் கழக மாநாடு! காவல் துறை அனுமதி! -

ABOUT THE AUTHOR

...view details