கிருஷ்ணகிரி:கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி நாடளுமன்ற தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகள் பேசும் மக்களும் கணிசமாக வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் மாம்பழம் விளைச்சலில் முன்னணி வகிக்கும் தொகுதிகளில் முதலிடம் வகிப்பது இந்த தொகுதிதான்.
மேலும் மாநிலத்தின் முதல் மாநகராட்சியான ஓசூர் இம்மாவட்டத்தில்தான் உள்ளது. இது குண்டூசி முதல் விமான உதிரிப்பாகங்கள் வரை பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டைகளின் கோட்டையாக விளங்குகிறது.
கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி ஆறு பாயும் முதல் மாவட்டமாகவும், தென்பெண்ணை ஆறு பயணம் தொடங்கும் மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தளி, ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கோட்டை:தமிழகத்தில் கடந்த காலங்களில் காங்கிரஸ் வலிமையாக இருந்த தொகுதிகளில் கிருஷ்ணகிரியும் ஒன்று. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி இதுவரை 17 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 18வது தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இவற்றில் காங்கிரஸ் - 8 முறையும், திமுக - 5, அதிமுக - 3, தமாகா - 1 முறை என வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ் vs திமுக:2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 75.19% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் 6,11,298 (52.64%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி 4,54,533 (39.14) வாக்குகள் பெற்று 1,56,765 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சியின் மதுசூதனன் - 28,000, வாக்குகளும், மநீம ஸ்ரீகாருண்யா 16,995 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
தேசிய கட்சிகளின் ஆதிக்கம்:தேசிய கட்சிகளின் ஆதிக்கம்மிக்க இந்த தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை ( 2001,2006,2011) ஒசூர் எம்.ஏல்.ஏ வாக இருந்த கோபிநாத் களமிறங்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஓசூர் மாநகர மண்டலக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் போட்டியிட்டுள்ளார்.