தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு போட்டி: வெளியானது அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள்! - PONGAL FESTIVAL

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு -கோப்புப்படம்
ஜல்லிக்கட்டு -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2024, 10:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. காளைகள் மீதான பாசமும், வீரத்தின் வௌிப்பாடக மட்டுமின்றி பொங்கல் கொண்டாட்டங்களின் அங்கமாகவும் தமிழ்நாடு மக்களால் ஜல்லிக்கட்டு போட்டிகள் கருதப்படுகின்றன.

எனவே தான், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை ஏற்பட்டபோது மெரினா போராட்டமும்,அதைதொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்களும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடை நீங்கியது முதலே, காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களி்ன் பாதுகாப்பு கருதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு பின்னர் போட்டிக்கான அனுமதியை அரசு வழங்கி வருகிறது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, பொங்கல் பண்டிகை தொடங்கி மே மாதம் வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை எனவும், மீறி நடத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு இயக்குனரின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்ட அதிகாரிகள், அமைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் போன்றோர் கண்டிப்பாக வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ குழு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது உடனிருந்து கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் காளைகளுக்குத் தேவையற்ற வலி அல்லது துன்பத்தை மாடுபிடி வீரர்கள் ஏற்படுத்தக் கூடாது எனவும் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டிக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் குழுவினர் முறையாக கடைப்பிடிக்கும் நோக்கில் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் திடலில் பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள், அவசர மருத்துவ சிகிச்சைக்கான கட்டமைப்பு உட்பட பாதுகாப்பு அம்சங்களும் இருந்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.jallikattu.tn.gov.in) விண்ணப்பிக்கவும், போட்டி தொடங்கும் தேதிக்கு முன்னரே அனைத்து ஏற்பாடுகளும் திடலில் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வழிக்காட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details