தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வலுக்கும் கண்டனம்.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் நடந்தது என்ன? - annapoorna owner srinivasan - ANNAPOORNA OWNER SRINIVASAN

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவாகரத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட வீடியோவை பொதுவெளியில் வெளியிட்ட பாஜகவினரின் செயலுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 2:57 PM IST

சென்னை: கோவை கொடிசியா வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தொழில் துறையினர் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ''பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை ஆனால் பன்னுக்குள் வைக்கும் ஜாமுக்கு 18% ஜிஎஸ்டியா?'' அதனை முறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டார்.

அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மேலும், அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டாரா அல்லது கேட்க வைக்கப்பட்டாரா என்று எதிர்கட்சிகளிடம் இருந்து கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக அவதூறு வழக்கில் ஆஜரான அப்பாவு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஜெயக்குமார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை போன்ற பாஜகவும் தற்போது செயல்படுகிறது என விமர்சித்துள்ளார். மேலும், நியாயமான கோரிக்கையை முன்வைத்த தொழிலதிபரை மிரட்டிய பாஜகவின் செயல் கீழ்த்தரமானது என்றும் பாஜக தலைகீழாக நின்றாலும், தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது எனவும் கூறியுள்ளார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்:திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? என தெரியவில்லை. உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என்றும் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.பி. ஜோதிமணி: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில், கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால், அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என இவ்வாறு ஜோதிமணி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், ''அன்னபூர்ணா உரிமையாளர் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பாஜகவினரின் செயலுக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனிடம் பேசி, இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளேன்.

அன்னபூர்ணா சீனிவாசன் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details