சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம் மற்றும் கர்நாடகா, போன்ற தொலைதூர மாநிலங்களின் பதிவு எண் கொண்டவையாக உள்ளன. பல்வேறு வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட 647 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வந்தன.
அதனை மாற்றி தமிழ்நாடு மாநில பதிவு எண் பெற வேண்டும் என சாலை போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், 105 பேருந்துகள் தங்களின் பதிவு எண்ணை தமிழ்நாட்டிற்கு மாற்றியது. மேலும், 547 ஆம்னி பேருந்துகள் தங்களின் பதிவு எண்களை தமிழ்நாட்டிற்கு மாற்றாமலும், சுற்றுலா நோக்கத்தில் இயக்காமல், முழுக்க முழுக்க பயணிகள் போக்குவரத்திற்காக அந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
உடனடியாக, இதுபோன்ற செயலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், தொடர்ந்து அவர்கள் போக்குவரத்துக்காக ஆம்னி பேருந்துகளைப் பயன்படுத்தி வந்தனர். தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் ஜூன் 14ஆம் தேதி இரவு 12 மணியுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து தொடர் விடுமுறை காரணமாக கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்த நிலையில் மீண்டும் நாளை காலை வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
ஆம்னி பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணிற்கு மாற்றுவதற்கான காலக்கெடு நாளை காலையில் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சாலை போக்குவரத்து மாநில ஆணையர் உத்தரவிட்டால் பறிமுதல் செய்வோம் என தெரிவித்தனர்.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பயணிகள் உட்கார்ந்து செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் தான் அரசு உரிமம் தந்து கொண்டிருந்தது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு இப்போது தான் வழங்க ஆரம்பித்துள்ளது. மற்ற மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்படுகிறது.
இதுதவிர, மற்ற மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளை ஓரிரு நாளில் பதிவு செய்து விடலாம். கட்டணமும் குறைவு. தமிழகத்தில் பேருந்துகளை பதிவு செய்ய அதிக நாட்கள் ஆகிறது. மேலும் கட்டணங்களும் மிக அதிகமாக உள்ளது. எனவே, பெரும்பாலான பேருந்துகள் வெளி மாநில பதிவு எண்களுடன் ஓடுகின்றன. தமிழக அரசும் உரிமம் அளிப்பதைத் துரிதப்படுத்தி, கட்டணங்களைக் குறைக்க வேண்டும்.
வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட 500 பேருந்துகளை இயக்காமல் நிறுத்திவிடுவோம். ஏற்கனவே,, தமிழ்நாடு பதிவு எண்ணில் இயக்கப்படும் 2,200 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணில் மாற்றிய பின்னர் இயக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்மாட் போன் முதல் ரயில் பாதை வரை..செயல்வீரர்கள் கூட்டத்தில் கோரிக்கைகளை அடுக்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா! - TRP Rajaa requested to railway line