சென்னை:பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் பங்கேற்ற பாஜக தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பிரதமரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. தமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கின்றனர். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு சில பல்கலைக்கழகங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பிடிபட்டதை பாஜக-வின் பணம் என்று பொய் கூறுகின்றனர். பிடிபட்ட பணத்திற்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தென்சென்னையில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். வெற்றி பெறாவிட்டால் ஆளுநர் பதவியை விட்டு வந்துவிட்டேனே என்று வருத்தப்படமாட்டேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். அவர் இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டபோது அதனை துணிச்சலாக கண்டித்தவர்.
ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். அவரை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர். அவர் தற்போது இருந்திருந்தால் நிச்சயம் ராமர் கோயிலுக்கு சென்று ராமரை கும்பிட்டு விட்டு, இந்தியாவின் பல ஆண்டு கனவு நிறைவேறியது என்ற ஒரு கருத்தைச் சொல்லிருப்பார்.
பிரதமரின் மதிப்பும், மரியாதையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. உலகின் பல நாட்டுத் தலைவர்கள் அவரை பாராட்டுகின்றனர். இந்தியாவின் ஒரே முகமாக மோடி இருக்கிறார். திருவள்ளுவரின் காவியை சிலர் வெண்மையாக்கினர். நாங்கள் மீண்டும் வெண்மையை காவியாக்குகிறோம். தொடக்கத்தில் திருவள்ளுவரின் படங்கள் காவி நிறத்தில்தான் இருந்தன" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், “மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.
இந்துத்துவா தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பாஜக நிரப்புகிறது” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க:"ஜெயலலிதா ஆன்மீகவாதி தான்; ஆனால்... அண்ணாமலைக்கு திருநாவுக்கரசர் பதிலடி! - Thirunavukkarasar