சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டுவதும் போஸ் கொடுப்பதுமாக இருக்கிறாரே தவிர பெரிய அளவில் செயலில் எதுவும் இல்லை. அந்நிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடு வருகிறது என்றால் அது பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று தேசத்தை பற்றி நல்ல எண்ணம் ஏற்படுத்தியதால் தான்.
மத்திய அரசு மாநில ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியில் 90 சதவீதம் எற்கனவே கொடுத்துவிட்டது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் அதனால் மூன்றாவது, நான்காவது பங்கை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, அதற்கு பின்னர் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்.
மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த நிதியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம். இதை செய்யாமல் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது என கூறுவது திமுகவின் செயல் அற்ற திறன். தனியார் பள்ளிகளில் இந்தி கற்று கொடுக்கப்படவில்லையா?அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே துன்பத்துக்கு உள்ளாக்கிறார்கள்.