சென்னை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தற்போது வரை 216 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 56 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றி வாய்ப்பை கொண்டாடி வருகின்றனர். அதேபோல, வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 5,57,451 வாக்குகள் பெற்று, 3,68,319 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ சத்தியன் மொகேரியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பதால், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
சரித்திர பதிவேடு வெற்றி
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், '' இரண்டு மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் (மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட்). இதில் பெரிய மாநிலமான, பலம் பொருந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கவிருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தின் வெற்றி சரித்திர பதிவேடு வெற்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், மாநிலத்தில் டபுள் என்ஜின் ஆட்சி (மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சி) இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை மறுபடியும் உறுதி செய்கிறோம். பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏறக்குறைய பல்வேறு திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. பாஜகவின் இலவச திட்டங்களாக இருந்தாலும், அது வாழ்வாதாரத்தை பெருக்கின்ற இலவச திட்டங்களாக இருக்கிறது என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:லட்டு விவகாரம்: ஏ.ஆர் நிறுவனத்தில் விசாரணைக்காக வந்திறங்கிய திருப்பதி போலீசார்!