தமிழ்நாட்டைப் போல் காமராஜர் நினைவிடத்தை வைத்துள்ளனர் - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு! சென்னை: சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “கல்வியில் தமிழகம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்றால் அதற்குப் பெருந்தலைவர் காமராஜர் தான் காரணம்.
மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கியவர் காமராஜர். கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் கட்டும்பொழுது நான் பள்ளி மாணவியாக இருந்தேன். கோட்டூர்புரம் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று சென்ற போது பார்த்தேன். மண்டபத்தின் வெளியில் கரும்புச் சாறுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டு இருந்தன. இப்பொழுதும் அப்படியே காட்சியளிக்கிறது. இங்கிருந்து புல் செடிகள் அனைத்தும் காய்ந்து போய் உள்ளது.
கருணாநிதிக்குச் சமீபத்தில் கட்டப்பட்ட அவரின் நினைவிடத்தை எவ்வாறு பராமரிக்கிறார்கள். இதனை எவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். நினைவிடத்தில் பராமரிப்பதிலேயே பாரபட்சம் காட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னாள் பெருந்தலைவர்களுக்கு மதிப்பே கிடையாது. நான் வெற்றி பெற்றால் இந்த நினைவிடத்தைச் சிறப்பாகப் பராமரிப்பேன். பெருந்தலைவர் காமராஜரின் சரித்திரத்தை யாராலும் மறைக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்காக மட்டுமே கூட்டணி வைக்கின்றனர். ஸ்டாலின் கூறுகிறார் ஜனநாயக முறைப்படி அவர்கள் இருப்பதாகவும், சர்வாதிகாரமாக பாஜக இருப்பதாகக் கூறுகிறார். சர்வாதிகார நிலையுடன் அவசர நிலையை பிரகடனப்படுத்தி இவர்களைச் சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ், கட்சி அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர் திமுகவினர். இந்திரா காந்திக்குப் பயந்து தான் திமுகவினர் கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்த பொழுது கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அன்று உச்சநீதிமன்றம் இல்லையா ஏன் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் 23 கேள்விகள் கேட்கிறார். நான் கேட்கிறேன், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது யார். ஜல்லிக்கட்டுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர் யார். காமராஜர் நினைவிடம், காந்தி மண்டபம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
தமிழ்நாட்டைப் போல் காமராஜர் மண்டபத்தை வைத்துள்ளனர். மோடி தமிழகம் வந்தால் சரணாலயத்துக்கு வருகிறார் என கூறுகிறார். அந்த சரணாலயத்தைப் போல் காமராஜர் மண்டபத்தை வைத்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட காமராஜர் மண்டபத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்லவில்லை, அவர்கள் வாரிசுகளின் கூட்டணிக்காகவே இங்கு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு கூட இங்கு வந்து மரியாதை செலுத்தி விட்டு பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை.
காங்கிரஸ் தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரை மதிக்கவில்லை. அவர்களுக்கு வாரிசு அரசியல் தான் முக்கியம். மறைந்த பெருந்தலைவர்களை மதிக்கவே மாட்டார்கள் வாரிசு வாரிசு என வாரிச் சுருட்டிக் கொண்டு செல்வார்கள். மழைக்கு வராத தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி எம்பி பிரச்சாரத்திற்கு வருகிறார்.
மழையின் போது மத்திய அமைச்சர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமரைக் கேள்வி கேட்கத் தகுதி இல்லை. அவர் 23 கேள்வி கேட்கிறார் நாங்கள் கேட்கிறோம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஸ்டாலின் சென்று பார்த்தாரா. இலங்கைக்கு கட்சித்தீவை ஏன் தாரை வார்த்தீர்கள். சிதம்பரம் நிதி அமைச்சராக இருக்கும் பொழுது விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்கள் என்ன செய்தார்கள். இவர்கள் எதையும் செய்யாமல் முதலமைச்சர் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் பணியாற்றும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் துவக்கம்! - Lok Sabha Election 2024