சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் தெலங்கானா ஆளுநருமான, தமிழிசை செளந்தரராஜன் தனது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வாக்காளர்களை என்னால் நேரில் வந்து சந்திக்க இயலாத நிலை ஏற்பட்டதால், ஜூம் மீட்டிங்க் ஒன்றை ஏற்பாடு செய்தேன். அந்த மீட்டிங்கில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மகிழ்ச்சியோடு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மீட்டிங்க்கில் பேச ஆரம்பித்த சில மணித்துளிகளில் பெண்கள் பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசப் படங்களை இடையில் விட்டு வேட்பாளருக்கும், வாக்காளருக்கும் இடையேயான இணைப்பைத் துண்டித்து, இவர்கள் எந்த விதத்திலும் இணைந்து விடக்கூடாது, இவர்களுக்கு எந்த விதத்திலும் ஆதரவு கொடுத்துவிடக்கூடாது என்றும், இங்கே நடக்கும் தப்புகள் எல்லாம் வேட்பாளருக்குத் தெரிந்து விடக்கூடாது என்றும், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்வதைத் தடுக்கும் விதமாகவும், நான் அவர்களிடம் வாக்குகளைக் கேட்டு விடக்கூடாது என்ற கீழ்த்தனமான எண்ணத்தோடு எல்லோரும் இணைந்து இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் போது, பார்க்க முடியாத அசிங்கமான படங்களைப் பரவ விட்ட திமுகவை நான் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறேன்.
இப்படிப்பட்ட மோசமான, கேவலமான அரசியலைச் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு தான் நீங்கள் கேவலமான அரசியலைச் செய்தாலும் மக்களுக்கான எங்களது தொடர்பைத் துண்டிக்க இயலாது. நேரடி அரசியலைச் செய்யுங்கள்.