கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் 42 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறோம். முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மீக பூமி தான்.
சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்பதன் ஒரு யுக்தி தான் இது. இதையும் அவர்கள் செய்து வைத்து இருக்கின்றனர்.
இதேபோல எங்காவது சிறுபான்மை மாநாடு நடந்தால், அதை முதலமைச்சர் துவக்கி வைக்காமல் இருப்பாரா? முதலமைச்சர் போகாவிட்டாலும் உதயநிதியாவது துவக்கி வைத்து விடுவார். சேகர்பாபு ஆன்மீகத்துக்காகவே பிறந்தவர். ஆன்மீக உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மீக மாநாடு நடத்துவது, தமிழகம் ஆன்மீகத்தின் பக்கம் தான் என்பதைக் காட்டுகின்றது. தமிழகத்தில் பெரியார் கொள்கையைச் சேர்ந்தவர்கள், பெரியாரின் கொள்கையையும் வழிபட்டு, அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றியவர்கள், ஆண்டாளையும் பின்பற்ற வேண்டி இருக்கும்.
உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் முருக பக்தர்களுக்கு எப்பொழுதும் இருக்கும் முருக பக்தர்கள் என்ற முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரை, இன்னும் பல நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னும் பல வேலைகளை கோயில்களில் செய்ய வேண்டியிருக்கிறது. பல கோயில்கள் மேம்படுத்தப்பட வேண்டி இருக்கிறது.
தவெக கொடி விவகாரம்: தவெக கொடியிலே இருப்பது வாகை பூவா? தூங்கு மூஞ்சி மரமா என்று தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சகோதரர், யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துக்களை சொல்கிறார்.
விஜய் கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்ட ரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்சி இருக்காது. விமரிசையாக ஆரம்பித்தாரோ என்னவோ, விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார். இன்னொரு கட்சியை துன்புறுத்தாமல், என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ செய்து கொள்ளட்டும்.
உக்ரைன் விசிட்: பிரதமர் உக்ரைன் சென்றிருப்பது உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் எனச் சொல்லி இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.
ரகசிய உறவு விவகாரம்:பாஜக - திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலை தான். கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து இருக்கிறது. மாற்று அரசியலை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது. திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.
அதிமுகவால், பாஜக வெற்றி பெற்றதா? பாஜகவால் அதிமுக வெற்றி பெற்றதா? என்ற கேள்விக்கு, இது ஒரு பெரிய விவாதம். ஆனால், கூட்டணி என வரும் பொழுது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது. இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.
ஆளுநர் டெல்லி பயணம் அவரிடம் தான் கேட்க வேண்டும். முருகனை எதிர்த்தவர்கள், ராமனுக்கு செருப்பு மாலை போட்டவர்கள், ராமன் தான் எங்களுக்கு வழிகாட்டி என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். முருகனை எதிர்த்தவர்கள், முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது.
ஒன்றியம் என்று சொன்னவர்கள் மத்திய அரசு என்று சொல்ல வேண்டி இருக்கிறது. யாரெல்லாம் பாஜக, இந்து மதக் கொள்கைகளை எதிர்த்தார்களோ, அவர்கள் எங்களை நோக்கி வர வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது என்பதுதான் முதலமைச்சர் மத்திய என்ற வார்த்தை காட்டுகிறது.
முருகனை தங்களது ஆளுமைக்குள் திடீரென ஏன் கொண்டு வர வேண்டும்? நாங்கள் தான் முதலில் வேலை எடுத்தோம். முருகனை மிக கீழ்த்தரமாக சிலர் பேசினா். அப்பொழுது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இன்று முருகனை ஆன்மீகத்தை கையில் எடுக்கவில்லை என்றால், 2026 மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்பதற்காக இதை கையில் எடுத்து இருக்கின்றனர் என்பது எனது கருத்து.