கோயம்புத்தூர்:கொடிசியாவில் இன்று (ஜூன்.15) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சமூக நீதி கோட்பாடு அடிப்படையில் துவங்கப்பட்ட இயக்கமான பாமக தொடர்ந்து தோல்விகளை தழுவுவது எதிர்காலத்தில் சமூக நீதி குறித்த கேள்வி உருவாகும் என்றார்.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுகின்ற அரசியல் கட்சி வெற்றி பெறுவது தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலம் இருந்து வருகின்ற உண்மை. இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ச்சியாக மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டிருப்பதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
நடந்து முடிந்த தேர்தலில் பண பலம், அதிகார பலம் வெற்றி பெற்றிருப்பதாக கூறும் எதிர்கட்சிகளின் கருத்துகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எப்போதுமே தோல்வியை தழுவுகின்றவர்கள் பணபலம், ஆட்பலம் என்று சொல்வார்கள். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்கள் வாக்களிக்காமல் வெற்றி பெற முடியாது. மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் வெற்றி கிடைத்திருக்கிறது.
தமிழக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்கான சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அறிவு சார்ந்த தளத்தில் இந்த அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி இருப்பதற்காக கிடைத்த அங்கீகாரம் மற்றும் கூட்டணி கட்சியினுடைய தொண்டர்களின் கடினமான உழைப்பும் சேர்ந்து கிடைத்த வெற்றி தான் இந்த மகத்தான வெற்றி.