கோயம்புத்தூர்: மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்நிலையில், இப்பந்தயம் வரும் மார்ச் 17ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக நாட்டு மாட்டுச் சந்தையும், இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு (மார்ச் 15, 16, 17) நடைபெற உள்ளது.
தமிழ் நாகரிகம் என்பது ஆன்மீகமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரிகம். பகுத்தறிவும், பக்தியும் குறைவில்லாத தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைக் கொண்டாடி மகிழும் விதமாக 'தமிழ் தெம்பு' என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.
மார்ச் 9ஆம் தேதி இத்திருவிழா தொடங்கியது. ஆதியோகி முன்பு நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், நாட்டுப்புறக் கலைகளை கண்டு ரசிக்கும் விதமாக மாலை 6 மணிக்கு சலங்கை ஆட்டம், பறையாட்டம், தேவராட்டம், கரகாட்டம், தஞ்சாவூர் தவில் போன்ற பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் சிறப்புகள், கட்டிட கலைக்கும், பக்திக்கும் உதாரணமாக திகழும் தமிழ் கோயில்கள், ராமானுஜரில் தொடங்கி முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி, காமராஜர் மற்றும் அப்துல் கலாம் வரை தமிழ் சமூகத்திற்கு பங்காற்றிய பெருந்தலைவர்களின் குறிப்புகள், பக்தியால் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் சிறப்புகள் உள்பட பல்வேறு விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.