சென்னை:தமிழ்நாட்டுக்கு 2025-26ஆம் ஆண்டுக்கு ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நபார்டு வங்கி சார்பில் மாநில கடன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னுரிமைத் துறைகளான விவசாயம் குறு தொழில், கல்வி, வீடு உள்ளிட்ட துறைகளுக்கு மொத்த கடன் திட்ட அறிக்கை 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான "ஸ்டேட் போகஸ் பேப்பர் 2025-26" (STATE FOCUS PAPER) என்ற ஆங்கில ஆய்வு அறிக்கையை அமைச்சர் வெளியிட்டார். மேலும் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான மாநில வங்கி கடன் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
28% ஜிடிபி பகிர்வு:இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவிலேயே அதிகபட்சமாக 28% ஜிடிபி பகிர்வை தமிழ்நாடு கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டிற்காக முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2024-2025 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.29,720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நபார்டு வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண்மை, கால்நடை, சிறு குறு தொழில் ஆகியவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது,"என்றார்.