சென்னை:சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனின் மருமகனும், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்தவருமான த.சி.க.கண்ணனின் உருவப்படத்தை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, “மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்தது. தற்போது அதை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார். பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 30.5 ஆக இருந்தது. எனவே அப்போது அதை அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சராக இருந்த மோடி கூறினார்.
1960-இல் பல நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை தீர்மானித்தபோது, மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில், மாநிலங்களுக்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை தீர்மானித்தனர். எஞ்சிய 40 சதவீத நிதியை பிற வகையில் கணக்கிட்டு, மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதிப் பகிர்வாக வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, அந்த மாநிலத்திற்கான நிதிப் பகிர்வில் 15 சதவீதம் அளவிற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. மேலும், மாநிலத்தின் மக்களிடையே உள்ள வருவாய் வித்தியாசம் 40 சதவீதம் அளவு கணக்கிடப்படுகிறது. ஜியோகிராபிகல் ஏரியா என்ற அடிப்படையில் 15 சதவீதமும், மாநிலத்தின் நிதி வசூல் போன்றவையும் கணக்கிடப்பட்டு, நிதிப் பகிர்வு வழங்கப்படுகிறது.