சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். ஷாட் கன் பிரிவில் தகுதி பெற்றுள்ள இவர் தலைமையில், 5 பேர் கொண்ட குழு இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரான்ஸ் செல்ல இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத் சார்பில் பிரித்வி ராஜ் தொண்டைமானிடம் சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அவர் கூறிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1. கேள்வி:தமிழகத்தில் இருந்து முதல் துப்பாக்கி சுடும் வீரராக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளீர்கள்.. ஈடிவி பாரத் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.. இந்த தருணத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: துப்பாக்கிச்சூடும் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து இதுவரை யாரும் தேர்வாகாத நிலையில், நான் தேர்வாகி இருப்பது பெருமையான தருணமாக இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என்பது பெரிய கனவு, அதிலும் இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதும் மிகப் பெரிய கனவு. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு கட்டாயம் பதக்கம் வென்று தருவேன்.
2. கேள்வி: உங்கள் தலைமையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேறவுள்ள ஐந்துபேர் கொண்ட குழு பற்றிக்கூற முடியுமா?
பதில்: இந்தியாவில் இருந்து தேர்வாகியுள்ள ஐந்து பேரும் வெவ்வேறு பிரிவில் விளையாட தேர்வாகி இருக்கின்றனர். என்னுடைய பிரிவில் ராஜேஸ் குமாரி என்பவரும் தேர்வாகி உள்ளார். நாங்கள் அனைவரும் ஒலிம்பிக்கிற்கான பயிற்சியை ஜூலை முதல் வாரத்தில் இத்தாலியில் தொடங்க உள்ளோம். தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் 10 நாட்களுக்கு முன் பாரிசிற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியையும் மேற்கொள்ள உள்ளோம்.
3. கேள்வி:இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்க பதக்கம் பெற்று தரமுடியும் என்பதில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளீர்கள்?
பதில்: உலக கோப்பை போட்டியில் பங்கேற்று 2 பதக்கங்களை பெற்றுள்ளேன். அப்போது 300க்கும் மேற்பட்ட உலகின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களை எதிர்கொண்டேன். ஒலிம்பிக் போட்டியில் 30 வீரர்களைதான் எதிர்கொள்ள போகிறேன். அவர்கள் மிகவும் சிறந்த விளையாட்டை நிரூபிக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கட்டாயம் என் ஒலிம்பிக் கனவை நனவாக்குவேன். அதற்கான முழு உழைப்பையும் செலுத்தி வருகிறேன்.
4. கேள்வி:இந்த போட்டியில் பங்கேற்க உங்களை நீங்கள் எப்படி தயார் படுத்தி உள்ளீர்கள்?
பதில்: உலகப் போட்டிகள் என்பது கடுமையானதாக இருக்கும். ஏனென்றால் பல்வேறு நாடுகளில் இருந்து தலைசிறந்த வீரர்கள் போட்டிக்கு வருவார்கள். அவர்களை எதிர்கொண்டு விளையாட மிக சிறந்த பயிற்சி வேண்டும். அதற்காக என் தந்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கள் சொந்த இடத்திலேயே பயிற்சி கூடத்தை அமைத்து தந்துள்ளார். அவரின் வழிகாட்டுதல் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பயிற்சியாளர் வழங்கும் பயிற்சியை கடைபிடித்து வருகிறேன்.
5. கேள்வி: துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தமிழக வீரர் தேர்வாக ஏன் இவ்வளவு காலதாமதம்?
பதில்: தமிழகத்தில் உலக தரம் வாய்ந்த துப்பாக்கி பயிற்சி கூடம் இல்லை என்பதால் சொந்த இடத்தில் துப்பாக்கி சூடும் பயிற்சி கூடத்தை அமைத்து பயிற்சி பெற்று வருகிறேன். ஆனால் அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. இதனால், தமிழக அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அப்படி நடந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வீரர்களாலும் சாதிக்க முடியும். தொடர்ந்து, தமிழகம் துப்பாக்கி சூடும் வீரர்களில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் கட்டாயம் திகழும்.
6. கேள்வி:உடல் வலிமையை தாண்டி மனதை கட்டுக்கோப்புடனும், நிதானத்துடனும் வைத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள்?
பதில்: உலக தரம் வாய்ந்த போட்டிகளில் பங்கேற்பதால் தனியாக மனோ தத்துவ நிபுணரை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது போட்டி நேரத்தில் பெரிதும் உதவியாக உள்ளது. அதேபோல் கடின உழைப்பு இருந்தால் யாரும் எளிதாக வெற்றி பெற முடியும். ஒரு புள்ளி குறைவாக இருந்தால் கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருந்தால் கட்டாயம் சாதிக்க முடியும்.
7. கேள்வி:துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியாவிலும், தமிழகத்திலும் பிரபல படுத்தி வீரர்களை ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அடுத்தப்படியாக துப்பாக்கி சூடும் போட்டி பிரபலமாக இருக்கிறது. மாநிலம் மற்றும் தேசிய போட்டிக்கும் முன் தேர்வு போட்டி, அதன் பிறகு தான் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியும். தேசிய போட்டியில் 8000 வீரர்கள் பங்கு பெறுகின்றனர், 8000 வீரர்கள் பங்கேற்பது என்பது மிகப்பெரிய போட்டியாகவே அமையும்.
தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி இடங்களை தயார் செய்தால் உலக அளவிலான போட்டிகளை நடத்தலாம், அப்படி போட்டிகள் நடந்தால் தமிழக போட்டியாளர்கள் உலக போட்டியாளர்களிடம் கலந்துரையாடவும், அவர்களுடன் போட்டி போடவும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்படி போட்டிகள் நடந்தால் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.
இதையும் படிங்க:சூப்பர் 8 சுற்று: அதிரடி காட்டுமா அமெரிக்கா? - தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்! - T20 World Cup 2024