சென்னை:சென்னையில் இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து தொலைபேசியை துண்டித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் தலைமைச் செயலகம் முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி உள்ளிட்டவைகளை தீவிரமாக சோதனை நடத்தினர்.
மேலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகள், அதிகாரிகளின் அறைகள் , சட்டப்பேரவை அரங்கம், வாகன நிறுத்தமிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
உதவி ஆணையர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிர விசாரனை நடத்தப்பட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பதும், அவர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலமாக விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது என அமைச்சர் அறிவுரை!