சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வரவேற்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசின் பணிக்கு 1.1.2004க்கு பின்னர் பணியில் சேர்ந்தோருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தாமல், ஒரு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தினை உத்தரவாதப்படுத்துவதற்கான இலக்கினை நோக்கிச் சென்றிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதோடு மட்டுமல்லாமல், இதுநாள்வரை குடும்ப ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இன்று அதற்கான திறவுகோலிற்கும் ஒன்றிய அரசு வித்திட்டுள்ளது. 25 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியம், அதற்குக் குறைவான பணிக் காலத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமுன்றத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்தவொரு வாக்குறுதியினையும் அளிக்காத பாஜக, மீண்டும் மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றினை 1.4.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது ஆட்சிப் பொறுப்பிலுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு 40 மாதங்கள் கடந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எள்ளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டிட்டோஜாக் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு; 31 அம்சக் கோரிக்கைகள் என்ன?