சென்னை:தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை தீராத நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளை கையாளும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சராக வி.சோமன்னா நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடிக்கும், அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனையடுத்து நேற்று, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தை சேந்த பாஜக எம்.பி. சோமண்ணா நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து உரிய நீரை வழங்க மறுத்து வரும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையும் கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் கர்நாடக மாநிலத்தை சேந்த பாஜக எம்.பி. சோமண்ணாவை நியமித்து இருப்பதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கர்நாடகாவைச் சேர்ந்த சோமண்ணா ஜல்சக்தி துறைக்கு அமைச்சர். மர நிழலில் மரம் வளராது என்பதைப் போல தமிழ்நாட்டுக்கு அவரால் எப்படி நியாயம் கிடைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.