புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த செவிலியரை நோயாளியின் உறவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியார்கள் மேம்பாட்டு சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஜன.16 அன்று சிறுநீரகப் பிரச்சினை காரணமாக நோயாளி வெங்கடாசலம் என்ற 64 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் குடிபோதையில் இருந்த நோயாளியின் உறவினர் செவிலியரை தாக்கியுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. உயிர் காக்கும் சிகிச்சை செய்யும் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அரசு மருத்துவமனைகளில் தாக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
இது போன்ற செயல்கள் மருத்துவ துறையில் பணி புரியும் ஊழியர்களின் பாதுகாப்பின்மையை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உரிய சட்டங்களின் கீழ் குற்றவாளி மீது சமரசமின்றி நடவடிக்கை எடுப்பதுடன் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் விதமாக குற்றங்கள் நடக்கும்போது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களை பாதுகாப்புக்கு நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்து தகராறில் மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது.. அறந்தாங்கியில் பயங்கரம்!
இது குறித்த பாதிக்கப்பட்ட பானுமதி கூறுகையில், “உயிரிழந்தவரின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தியை அழைத்திருந்தேன் ஆனால் வர தாமதமானது. அதை ஏற்க முடியாமல் உயிரிழந்தவரின் உறவினர் தாக்க முற்பட்டார். அதில் தோள்பட்டையில் பலமான அடிவிழுந்ததால் அங்கு வலியாக உள்ளது” என்றார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர், “விடுமுறையும், பண்டிகையும் விட்டு விட்டு பொதுமக்களின் சேவைக்காக நாங்கள் மருத்துவமனையில் உள்ளோம். இந்நிலையில், எங்களிடம் பொதுமக்கள் இது போன்று நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. பெரும்பாலும் செவியலர் பணியில் ஈடுபடுவது பெண்கள். இவ்வாறு மக்களுக்காக சேவை செய்யும் எங்களை பொதுமக்கள் தாக்குதலுக்கு உட்படுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு தேவை” என்றார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணி மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது செவிலியர் பானுமதியை தாக்கிய ராமலிங்கத்தை கணேஷ் நகர் காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருதகாவும், அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை தொடர்ந்து செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்பினர்.