சென்னை:பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா காலை 9:30 மணிக்கு வெளியிட்டார். இதில், மாநிலம் முழுவதும் 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகின. மொத்தமாக 7,60,606 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 4,08,440 பேர் மாணவியர்கள், 3,52,165 பேர் மாணவர்கள், ஒருவர் மட்டும் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
தேர்ச்சி விவரங்கள்: இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி 7,19,196 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 94.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவியர்கள் 3,93,890 பேர் என 96.44% மற்றும் மாணவர்கள் 3,25,305 பேர் என 92.37% தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் (100%) தேர்ச்சி அடைந்துள்ளார். இம்முடிவுகளின் படி, மாணவர்களை விட 4.07 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.