சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியானது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ( நிர்வாகம்) சுகுமார் மற்றும் கூடுதல் ஆணையர் ( கல்வி ) ஹரிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 2023,2024 ஆகிய ஆண்டுகளில் நாட்காட்டி வெயிடப்பட்டுள்ளது. அதே போல வரும் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,200 பெரிய நாட்காட்டியும், 25,000 சிறிய நாட்காட்டியும் தயார் செய்யப்பட்டு திருக்கோயிலில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
கடந்த ஆண்டுகளில் சிறிய நாட்காட்டிகள் மூலம் 6 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்தது. பெரிய நாட்காட்டியை தயாரித்து அரசு அலுவலங்கள் கொடுக்கப்பட்டது. அதன் தயாரிப்பு செலவிலனம் போக மீதம் 3 லட்சம் திருக்கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
ஆயிரம் கிலோ தங்கம்
இந்த ஆண்டு இறுதியில் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்படும். முன்பு வரை 639 கிலோ தங்கங்கள் தான் வைப்பு நிதியில் வைக்கப்பட்டது. ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்து கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. 20 ஆயிரம் திருக்கோயிலுக்கு அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பல கோயில்களில் அர்ச்சர்கள் தொகையை பெற்றுக்கொண்டு கோயில் உள்ளே அழைத்து செல்கின்றனர் என்பதில் எங்களுக்கும் அந்த ஏக்கம் உள்ளது. முடிந்த அளவு அவர்களை கட்டுப்படுத்தி வருகிறோம். ஏதாவது வகையில் நீதிமன்றம் சென்று அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று விடுகிறார்கள். முழு முயற்சியோடு இதுபோன்ற செயல்களை நடக்காமல் இருப்பதற்கு மிக விழிப்புணர்வோடு பெரிய திருக்கோவில்களுக்கு நல்ல ஆளுமை உடைய அதிகாரிகள் நியமித்து முழு நேரம் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை நியமித்து கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இந்த குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதில் துறை முழு வேகத்தோடு செயல்படும்.