திருப்பத்தூர்:நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதிகளான கன்னிகாபுரம், புதுமனை, ரெட்டித்தோப்பு, கம்பிக்கொல்லை ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், "தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறுகின்ற தேர்தலில், ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசை விரட்டியடித்து, வருகின்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இன்றைக்கு விலைவாசி, மின்கட்டணம் வரி எல்லாம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத, கையாளாகாத அரசு தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிரே போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களுக்கு வாக்களித்தால், அவர்களை சந்திக்கக் கூட முடியாது. தேர்தலில் காசு கொடுத்துவிட்டு வெற்றி பெற்றால் அவர்களைக் காணவே முடியாது. அதிமுக வேட்பாளர் அரசுப் பணியைத் துறந்து மக்கள் பணி செய்ய வந்துள்ளார். எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.