சென்னை:நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தனர். அதனால் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்படி, ஆளுநர் மாளிகைக்கு வந்த தமிழக முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து புத்தகத்தை பரிசளித்தார். இதனைத் தொடர்ந்து, விழா திடலுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஒன்றாக வந்தனர். பின், ஆளுநர் தேநீர் விருந்துக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச்.ராஜா, பாமக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி, தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.