தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போதையில் இருந்து நமது இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்' - சுதந்திர தின வாழ்த்தில் ஆளுநர் ரவி கோரிக்கை! - rn ravi - RN RAVI

Tn governor independence day wishes: சுதந்திர தின வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, போதையில் இருந்து நமது இளைஞர்களை நாம் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து (கோப்புப்படம்)
ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து (கோப்புப்படம்) (credit - RAJ BHAVAN, TAMIL NADU X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 10:36 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள சுதந்திர தின விழா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது; '' மாண்புமிகு எனது அன்பான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே, நமது சுதந்திரத்தின் 78வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான மற்றும் சிறப்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், நீண்டகால அடக்குமுறை காலனித்துவ ஆட்சியில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத் தந்த நமது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பாரதம் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. உலக பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்துக்கு நாம் உயர்ந்துள்ளோம், விரைவில் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறத் தயாராகி விட்டோம். நண்பர்களே, நமது தேச வரலாற்றின் இந்த பொற்காலத்தில் இருப்பது நமது அதிர்ஷ்டம்.

நண்பர்களே, நமது சமூகத்தில் குறிப்பாக நமது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருட்களின் பரவலால் நாம் மிகவும் கவலை அடைந்துள்ளோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் எளிதில் கிடைப்பதாக கவலையளிக்கும் தகவல்கள் உள்ளன. இது மிக, மிக அபாயகரமானது.

போதைப்பொருள் - குடும்பங்கள், சமூகங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளை அழித்துள்ளது. நமது இளைஞர்களே நமது எதிர்காலம். போதையில் இருந்து நமது இளைஞர்களை நாம் காப்பாற்ற வேண்டும். போதைக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

நண்பர்களே, கடந்த இரண்டு ஆண்டுகளில், கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாரயம் அருந்தியதால் விலைமதிப்பற்ற பல உயிர்களை இழந்துள்ளோம். இந்த ஆண்டு இது ஒப்பீட்டளவில் அதிக பேரழிவை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள். வருவாய் ஈட்டித்தந்த உறவுகளை பல குடும்பங்கள் இழந்துள்ளன.

பெண்கள் கணவன்மார்களை இழந்துள்ளனர், குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு சென்றுள்ளனர். இதற்கு காரணமான மரண வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் இருக்கவும் அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் காவல்துறை உறுதிப்படுத்தும் அதேவேளையில், நமது சட்ட அமலாக்க அமைப்புகளும் பொதுமக்களும் கள்ளச்சாராய விநியோகத்துக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மிகவும் மோசமாக பாதிக்கப்படும் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிராக செயல்படுமாறு நான் வலியுறுத்துகிறேன்.

நமது ஜனநாயகம் வலுவானது. 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் நமது வரலாற்றுபூர்வ தேசிய நோக்கத்தில் தொடர்ந்து நாம் உறுதியுடன் இருப்போம். நமது தேசிய மகிழ்ச்சித் திருவிழாவான நமது சுதந்திர தினத்தை முழு பூரிப்புடனும் உற்சாகத்துடனும் ஒவ்வொரு வீட்டிலும் கட்டடத்திலும் நமது மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்'' என இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details